தொழுகை முறை
கஅபாவை முன்னோக்குதல்
(முஹம்மதே!)
உம்முடைய முகம் வானத்தைநோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே
நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது
முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே
இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! 'இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை' என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை .
அல்குர்ஆன் 2:144
...நீ
தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை
(கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602
நிய்யத் (எண்ணம்)
நிய்யத்
என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல்
என்பதே அதன் பொருளாகும்.மேலும் உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு
நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாயால் மொழிந்து விட்டுச்
செய்ததில்லை
'அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
தக்பீர்
தொழுகைக்காக
கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.
இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை
செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.
... நீ
தொழுகைக்குத் தயாரானால் (முதலில்) முழுமையாக உளூச் செய்! பின்னர் கிப்லாவை
(கஅபாவை) முன்னோக்கு! பின் தக்பீர் கூறு!.. என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602
இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி
நிற்கும்
போது இரு கால்களுக்கிடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டுமென நபி (ஸல்)
அவர்கள் கூறவில்லை. அவர்களின் செயல் முறைகளிலிருந்தும் அறிந்து கொள்ள
முடியவில்லை. எனவே அவரவர் இயல்புக்குத் தக்கவாறு அடுத்தவருக்கு இடையூறு
இல்லாத வகையில் நடுத்தரமாக நின்று கொள்ள வேண்டும்.
இரு கைகளை உயர்த்துதல்
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது இரு கைகளையும் இரு தோள் புஜங்கள் வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ 735,முஸ்லிம் 586
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும் போது தம் இரு கைகளையும் இரு காதுகளின் கீழ்ப்பகுதி வரை உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 589
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 223, அபூதாவூத்643, நஸயீ 873, அஹ்மத் 8520
நெஞ்சின் மீது கை வைத்தல்
கைகளை
உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது
வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின்
மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க
வேண்டும்.
'நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஸலாம் கூறும் போது) தமது வலது புறமும், இடது புறமும் திரும்பியதை நான் பார்த்தேன். (தொழுகையில்) இதை நெஞ்சின் மீது வைத்ததை நான் பார்த்தேன்' என்று ஹுல்புத்தாயீ (ரலி) கூறினார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் யஹ்யா என்பவர் இதை என்று சொல்லும் போது, வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்துக் காட்டினார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் குறிப்பிடுகின்றார்கள்.
நூல்: அஹ்மத் 20961
தொழும் போது மக்கள் தம் வலக்கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்: புகாரீ 740
நபி (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது முன் கை, இடது மணிக்கட்டு, இடது குடங்கை ஆகியவற்றின் மீது வைத்தார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸயீ 879
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற போது... தங்களது வலக்கையால் இடக்கையைப் பிடித்திருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் 624
கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை.
பார்வை எங்கு இருக்க வேண்டும்?
'தொழும் போது தங்கள் பார்வைகளை வானத்தின் பக்கம் உயர்த்துவோருக்கு என்ன நேர்ந்து விட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்; இல்லை எனில் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 750, முஸ்லிம் 649
தொழுகையில்
திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். 'ஒரு
அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 751
தொழுகையின் ஆரம்ப துஆ
'இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், கிராஅத்துக்கும் (குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்?' என நான் கேட்டேன். அதற்கு,
'அல்லாஹும்ம
பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப்.
அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ்.
அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
என்று ஓதுவேன்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என்
தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை
அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து
தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 744
சூரத்துல் பாத்திஹா ஓதுதல்
தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும் .
'சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உபாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 756, முஸ்லிம் 595
ஆமீன் கூறுதல்
சூரத்துல்
ஃபாத்திஹா ஓதி முடித்ததும் 'ஆமீன்' கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும்
தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின்
நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
'இமாம் 'கைரில்
மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்' எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்!
ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து
விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 782
துணை சூராக்கள்
சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.
முதல்
இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும், துணை சூராவும் நபி (ஸல்)
அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும்
ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து
அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்கள் இரண்டையும் ஓதுவார்கள். பிந்திய
இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை
எங்களுக்குக் கேட்கும் அளவிற்கு ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல்
ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும்,சுப்ஹிலும் செய்வார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்கள்: புகாரீ 776, முஸ்லிம் 686
ருகூவு செய்தல்
'நபி
(ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும்
போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை
உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி)
நூல்: புகாரீ 735
நபி
(ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தலையை உயர்த்தவும்
மாட்டார்கள்; ஒரேயடியாகத் தாழ்த்தவும் மாட்டார்கள்;இரண்டிற்கும் இடைப்பட்ட
நிலையில் வைப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 768
'ருகூவிலும், ஸஜ்தாவிலும்
எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை
செல்லாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 245, நஸயீ 1017, அபூதாவூத் 729, இப்னுமாஜா 860, தாரமீ 1293
ருகூவில் ஓதவேண்டியவை
சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். நூல்: நஸயீ1121
ருகூவிலிருந்து எழும் போது
ருகூவிலிருந்து
எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை
அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை
உயர்த்தி, பின்னர் கைகளைக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று
கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது
தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள்.
ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று
கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து 'ரப்பனா லக்கல் ஹம்து' என்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 789
ஸஜ்தா
ருகூவிலிருந்து எழுந்து, ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும்.
கைகளை முதலில் வைக்க வேண்டும்
ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும்.
'உங்களில்
ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது
கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1079
தரையில் பட வேண்டிய உறுப்புகள்
ஸஜ்தாச்
செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு
மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க
வேண்டும்.
8 கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.
ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது.
ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும்.
இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும். தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.
'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 812
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது முன் கைகளைத் தமது காதுகளுக்கு நேராக வைத்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸயீ 18115,அஹ்மத் 18115, தாரமீ 1323
நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது தொடைகளின் மீது வயிற்றைத் தாங்கிக் கொள்ளாமலும் தமது இரு தொடைகளையும் விரித்தவர்களாகவும் ஸஜ்தாச் செய்வார்கள்.
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: நஸயீ 1093
'நீ ஸஜ்தாச் செய்யும் போது உனது உள்ளங்கைகளை (தரையில்) வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் .
அறிவிப்பவர்: பரா (ரலி)
நூல்: முஸ்லிம் 763
...நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது கைளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தமது கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள்...
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)
நூல்: புகாரீ 828
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாவில் இரு குதிகால்களையும் இணைத்து விரல்களைக் கிப்லாவை முன்னோக்கி வைத்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 654, இப்னுஹிப்பான் 1933, ஹாகிம் 832
நாய் விரிப்பதைப் போல் கைகளை வைக்கக் கூடாது
தொடைகளும், வயிறும் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமருவது போல் முன்கைகளைத் தரையில் பரப்பி வைப்பதைப் போன்று வைக்கக் கூடாது.
'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை
ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.
சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். புகாரீ 817
இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்
முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே,
'ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: நஸயீ 105
நபி (ஸல்) அவர்கள் ஒற்றையான ரக்அத்களை நிறைவேற்றி விட்டு எழும் போது உட்காராமல் நிலைக்கு வர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: புகாரீ 823
ஸஜ்தாவிலிருந்து எழும் முறை
ஸஜ்தாவிலிருந்து
எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழ
வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது தொடர்பாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது
பலவீனமாதாகும்.
முதல் இருப்பு
இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்து, இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.
கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும் இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.
மூன்று, நான்கு
ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது
காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும்.
கடைசி
இருப்பாக இருந்தால் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து
இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி, அதன்
விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமரும் போது இடது கால் மீது அமர்ந்து, வலது காலை நாட்டி வைத்துக் கொண்டார்கள். கடைசி இருப்பின் போது இடது காலை வெளிப்படுத்தி, வலது காலை நாட்டி வைத்து, தமது இருப்பிடம் தரையில் படுமாறு அமர்ந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூ ஹுமைத் (ரலி)
நூல்: புகாரீ 828
விரலசைத்தல்
அத்தஹிய்யாத்
இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும்
மடக்கி, ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி,அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும்.
அப்போது பார்வை ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்.
நபி
(ஸல்) அவர்கள் தொழுகையின் அமர்வில் உட்கார்ந்தால் தம்முடைய வலது முன்கையை
வலது தொடையின் மீது வைத்து,தம் வலக்கையின் விரல்கைள் அனைத்தையும் மடக்கிக்
கொண்டு, பெருவிரலை ஒட்டியுள்ள சுட்டு விரலால் சைகை செய்வார்கள். இடது
முன்கையை இடது தொடையில் வைப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1018
'...நபி
(ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும்
வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது
விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும்
இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம்
(யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸயீ 879
முதல் இருப்பில் ஓத வேண்டியவை
முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும்.
அத்தஹிய்யாத் துஆ
அத்தஹிய்யா(த்)து
லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க
அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா
இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன
முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு
பொருள்: சொல், செயல், பொருள்
சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே
உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின்
அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின்
நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும்
உறுதியாக நம்புகிறேன்.
எனத் தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 1202, முஸ்லிம் 609
ஸலவாத்
அத்திஹிய்யாத் ஓதிய பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும்.
ஒரு
மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள்
நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம்
எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில்
எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?' என்று கேட்டார். இந்த மனிதர்
இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே' என்று நாங்கள் நினைக்கும் அளவு
நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) 'நீங்கள் என் மீது
ஸலவாத் சொல்வதாக இருந்தால்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்
நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா
ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த
அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்
பொருள்:
இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர்
மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத்
நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம்
நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப்
படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!)என்று
கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 16455
மூன்றாம் ரக்அத்
இரண்டாம்
ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று
கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக்
கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் சூரத்துல் பாத்திஹா
மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக்
கொள்ளலாம். இதற்குரிய ஆதாரங்களை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 739
நிலையில் ஓத வேண்டியதை ஓதிய பின்னர் ஏற்கனவே கூறிய படி ருகூவு, ஸஜ்தாக்களை நிறைவேற்ற வேண்டும்.
நான்காம் ரக்அத்
மூன்றாம்
ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி
எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம்
ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள
வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே அனைத்துக் காரியங்களையும்
செய்ய வேண்டும்.
நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள்
செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும். இருப்பில் அமரும் போது
மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து, இடது காலை வலது
காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும்.
பின்னர் முதல் இருப்பில் ஓதிய அத்தஹிய்யாத், ஸலவாத் ஆகியவற்றை ஓத வேண்டும். அத்துடன் பின் வரும் துஆக்களையும் ஓத வேண்டும்.
இருப்பில் ஓதும் துஆக்கள்
'உங்களில்
ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு
மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை
விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 926
அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
'அல்லாஹும்ம
இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின்
ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத்,வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித்
தஜ்ஜால். பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின்
வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின்
சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும்
பாதுகாப்பு தேடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 924
அத்தஹிய்யாத்
ஓதிய பின்னர்) உங்களுக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம்
துஆச் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரீ 835, முஸ்லிம் 609
ஸலாம் கூறி முடித்தல்
இதன் பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.
வலது புறமும், இடது புறமும் திரும்பி 'அஸ்ஸலாமு அலை(க்)கும் வரஹ்ம(த்)துல்லாஹ்' என்று நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்கள்: திர்மிதீ 272, அபூதாவூத் 845, இப்னுமாஜா 904, அஹ்மத் 3516
நூல் : தொழுகையின் சட்டங்கள்
ஆசிரியர் : எம்.ஐ.சுலைமான்.
மாஷா அல்லாஹ் மகப்பிரயோசனம்
ReplyDeleteGood Ma sh allah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMasha Allah 😊 shakar 🤝
ReplyDeleteMasha Allah
ReplyDeletemasha allah
ReplyDeleteAlhamthulilah ya Allah enaiyum tholukai yaliyaka aakuvaaiyaka
ReplyDeleteZajakallah hairu alhamdulillah
ReplyDeleteMasha allah
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteபுகழ் அனைத்தும் அல்லா ஒருவனுக்கே
ReplyDeletemasha alllah
ReplyDelete
ReplyDeleteகையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதற்கு ஆதாரம் உள்ளது அபுதாவூத் 756,758 பார்க்க
Mashaa allaah
ReplyDeleteAlhamathulilah
ReplyDeleteAlhamthuillah
ReplyDeleteIsmail
ReplyDeleteIslam
DeleteMasha allah
ReplyDeleteMasha allah... very excelent
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDelete