நபி வழி: August 2012

Responsive Topnav Example

யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால் ...

                                                                             அல்குர்ஆன் வழியில் அறிவியல்
                                                                                        
S.ஹழரத் அலி, ஜித்தா 
    னித சமுதாயம் படிப்பனை பெறுவதற்காக ஏராளமான வரலாறு சம்பவங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். கடந்த காலச் சம்பவங்களையும், இனி வரப்போகும் காலங்களில் நடபெற வேண்டிய செய்திகளையும் முன்னறிவிப்பாக சொல்கிறான்.
    அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லிய செய்திகள் அனைத்தும் சத்தியமானவை. கதையோ கற்பனையோ அல்ல. சில செய்திகள் நம் சிற்றறிவிற்கு புலப்படாமல் போனாலும், படைத்த ரப்பிடமிருந்து வந்த உண்மை என்று விசுவாசிகள் அனைவரும் விசுவாசம் கொள்கிறோம். இது போன்ற சில சம்பவங்களை நம் அறிவிற்கு விளங்குமளவு அறிவியல் ஆதாரங்களோடு அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்கிறான்.
    ஒரு வரலாற்று சம்பவத்தை அல்குர்ஆனில் பார்ப்போம். அல்லாஹ்வின் நல்லடியார் துல்கர்னைன் பயணம் செய்கிறார். முதலில் சூரியன் மறையும் மேற்கு திசைக்கும் பின்பு சூரியன் உதயமாகும் கிழக்கு திசை பக்கம் செல்கிறார்.
    (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார். சூாியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்தபோது, அது ஒரு சேறு கலந்த நீாில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; ”துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்”" என்று நாம் கூறினோம்.
    (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; ”எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.” பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
    பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓாிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்ைைல. அவர்கள் ”துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜுஜும், மஃஜுஜும் பூமியில் ஃபஸாது குழப்பம் செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
    அதற்கவர்; ”என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; ”நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் ”உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்”" (என்றார்).
    எனவே, (யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை. ”இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள்தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார். அல்குர்ஆன் 18:83-98
    யஃஜுஜு, மஃஜுஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள். அல்குர்ஆன் 21:96
    இப்படியான ஒரு சமுதாயம் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது. 21 நூற்றாண்டு அறிவியல் கண்களுக்கு இன்னும் அவர்கள் தென்படவில்லை. தடுப்புச் சுவரை துளைத்து, உடைத்து அவர்களை அல்லாஹ் வெளியேற்றும் பொழுது உலகம் அவர்களால் பெரிதும் துன்பப்படும். இந்த விசித்திர குள்ளர்கள் நாம் வாழும் உலகிலேயே எங்கோ மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
    ஃபுளோரஸ் தீவில் விசித்திர குள்ளர்கள்
    இந்தோனேஷியா கிழக்குப் பகுதியில் Flores என்ற ஒரு தீவு உள்ளது. இந்த தீவு மலைகளும் காடுகளும் எரிமலைகளும் நிறைந்த ஒன்று. இங்குள்ள கிராமத்தில் வயது முதிர்ந்த பெரியவர் நெல்லிஸ் குயா தனது மூதாதையர்கள் கூறியதாக சொல்லும் விசித்திர கதை.
    இந்த கிரமத்திற்கு அப்பால் உள்ள மலைகளுக்கு பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்கள் பெரிதாகவும் உடல் முழுவதும் ரோமம் மூடியவர்களாகவும், ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள் என்றும், இவர்கள் அடிக்கடி தங்கள் கிராமத்திற்குள் புகுந்து பயிர்கள், உணவுப் பொருள், பழங்களை திருடிக்கொண்டு ஓடி விடுவார்கள். பெரும் பசிக்காரர்கள். எதையும் தின்பவர்கள். இக்குள்ளர்களை (Ebu gogo) எபு கோகோ என்று அழைப்பதாகவும் கூறினார். இதற்குப் பொருள் எதையும் தின்னும் தின்னிப்பாட்டி.
    இது போன்ற கதை இந்தோனேஷியா கிராமங்களில் ஏராளமாய் உண்டு என்பதால் ஆய்வாளர்கள் இக்கதைகளை கற்பனை என ஒதுக்கித் தள்ளினர். ஆனால் 2003ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா வாழ்ந்த கிராமத்திலிருந்து 75 மைல் தொலைவில் ஒரு குகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புக்கூடு, மேற்கண்ட கதைகள் கற்பனையல்ல உண்மைதான் என அறிவித்து உலகத்தை வியக்க வைத்தது.
    அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா தொல் பொருள் ஆய்வுக் குழுவினர் டாக்டர் ரிச்சர்ட் ராபர்ட் தலைமையில் இவ் எலும்புக் கூட்டுடன் பல மிருகங்களின் எலும்புகளையும் 19 அடி ஆழத்தில் கண்டு பிடித்தனர். முதலில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று நம்பினர். ஏனெனில் மொத்த உயரமே மூன்று அடிதான். இறுதியில் விரிவாக ஆராய்ந்த பொழுது, இது வரை யாரும் அறியாத புதிய மானிட இனம் என்பதை அறிந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயதுடைய பெண்ணின் எலும்பாகும்.
    இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோதான். மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும் சிக்கல் நிரம்பியதாகவும் காணப்படுகிறது. இக்கண்டு பிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்கள் மட்டுமே நுட்பமான அறிவு நிறம்பியவர்கள் என்ற கருத்துக்கு மாறாக சிறிய அளவுள்ள மூளையை உடைய இந்த சித்திரக்குள்ளர்கள் வேட்டையாடுதல் வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம் அறிந்தவர்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த 3 அடி பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
    இது பற்றி டாக்டர் ரிச்சட் ராபர்ட் கூறும் பொழுது மானிட வரலாற்றில் 18 ஆயிரம் என்பது சமீபமாக ஒன்று. இந்த புதிய இன குள்ள மனிதர்கள் இன்றும் கூட அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இப்புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறினார்.
    முதியவர் நெல்லிஸ் குயாவின் கிராமத்தினர், இன்னும் இந்த விசித்திர குள்ளர்கள் மலைகளுக்கு அப்பால் வசிப்பதாக நம்புகின்றனர். இக்கிராமத்தினர் அனைவரும் கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். விசித்திர குள்ளர்கலை Ebu Gogo என்று அழைப்பது  யஃஜுஜ், மஃஜுஜின் ஆங்கிலப் பெயரான Yahog, Magog வுக்கு நெருக்கமாக உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த சித்திர குள்ளர்கள் மனித இனத்தின் ஒரு பிரிவினர். இவர்களுக்கு Homo floresiensis என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:” என்பது நபிமொழி அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்: தப்ரானீ
    இவர்கள் நூஹ்(அலை) அவர்களின் புதல்வர் ‘யாபிஸ்’ என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.
    ‘இவர்கள் உயரம் ஒரு சான் அல்லது இரு சான் அதிகபட்சம் மூன்று சான்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்’ என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாக ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசித்திர குள்ளர்கள் இறுதி நாளின்போது வெளிக்கிளம்பி வந்து பெரும் அட்டூழியங்களில் ஈடுபடுவர். ஃபத்ஹுல்பாரி, நூல்: புகாரி 7ம் பாகம் பக்கம் 573
     “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வரும்வரை நீங்கள் போராடிக்கொண்டே இருப்பீர்கள்; அவர்களின் முகம் அகன்றதாகவும், கேடயம் போல்(வட்டமாகவும்) கண்கள் சிறிதளவும், முடிகள் பட்டையாகவும் அமைந்திருப்பார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் நூல்கள்: அஹ்மத் தப்ரானீ
    கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டின் முக அளவும் கிராம மக்களின் வர்ணிக்கும் ‘எபு கோகோ குள்ளர்களின் அமைப்பும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர்னைன் அவர்கள் பயனம் செய்த கீழ்திசை இரு மலைகள் சூழ்ந்த அமைப்பு, விளங்கிக்கொள்ள முடியாத மொழி பேசுபவர்கள், மேலும் எரிமலை குழம்பு நிறைந்த ஃபுளோரஸ் தீவில் இரும்புப் பாலங்களும் நெருப்பாக்குவதற்கு தேவையான மரங்கள் மற்றும் நிலக்கரியும் அங்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
    “யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான், அவர்களில் முதல் கூட்டத்தினர் ஒரு நீரோடையைக் கண்டு அதன் நீரைப் பருகுவார்கள். அடுத்த கூட்டத்தினர் வரும்போது (தண்னீர் இராது என்பதால்) அந்த இடத்தில் ஒரு சமயத்தில் தண்ணீர் இருந்தது என்று கூறுவார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(அரழி) நூல்: முஸ்லிம்
    இக்கூட்டத்தினர் வெளியாகும்போது மக்களுக்கு ஒன்றும் கிடைக்காது என்றளவுக்கு அனைத்தையும் தின்று தீர்த்து அநியாயம் செய்வார்கள். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஒரு மாட்டின் தலை இன்று என்ன பெறுமதியோ, அது அன்று நூறு தங்க காசுகளைவிட அதிக வெகுமதியாக இருக்கும்”
    துல்கர்னைன் எழுப்பிய தடுப்புச் சுவர் இந்தோனேஷிய தீவுகளில் எதாவது ஒன்றில் இன்ஷா அல்லாஹ் இருக்கலாம். ஃபுளோரஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடும் எலும்புக்கூடும் தரும் ஆய்வுச் செய்திகள், குள்ள மனிதர்கள் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள், கூர்மையான கற்கலால் ஆன ஆயுதங்களை கொண்டு ராட்சத பல்லி, முயல் அளவில் உள்ள காட்டெலி அன்று வாழ்ந்த குள்ள யானை போன்ற மிருகங்களை வேட்டையாடி வீழ்த்தியுள்ளார்கள். இவ்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி கவனிக்கத்தக்கது.
    (யஃஜுஜ், மஃஜுஜ் மடிந்தபின்) அவர்களின் அம்புகளையும், விற்களையும், அம்பாரத் தூளிகளையும் ஏழு ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் பயன்படுத்துவார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரழி) நூல்:திர்மிதீ
    ஏழு ஆண்டுகள் விறகாக பயன்படுத்துமளவிற்கு அம்பாரக்கூடுகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தால் இக்கூட்டம் அடர்ந்த காடுகளில் வாழ்ந்தாலே இது சாத்தியம். மனிதன் கால்படாத ஏராளாமான காட்டு பிதேசங்கள் இன்றும் இந்தோனேஷிய தீவுகளில் உள்ளன. ஆகவே அறிவியல் சான்றுபடியும் கிராம மக்கள் வழிவழி கதைகள் மூலமும் அல்குர்ஆன் அல்ஹதீஸ் மூலம் அறியும்   யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் இந்தோனேஷிய தீவுகளில் இன்ஷா அல்லாஹ் வாழ்ந்து வரலாம். அல்லாஹ் அறிந்தவன். எது எப்படியோ 3 அடி குள்ள மனிதர்கள் ஆதம்(அலை) சந்ததிகள் என்ற குர்ஆன், ஹதீஸ் முன்னறிவிப்பு இன்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
    ஃபித்னாக்கள் புறப்படும் திசை கீழ்த்திசை
    யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டம் வெளிக்கிளம்புவதற்கு முன்னதாக தஜ்ஜால் புறப்பட்டு வருவான். தஜ்ஜாலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள். தஜ்ஜால் குழப்பவாதி, இனி புதிதாக பிறப்பவன் அல்ல. இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கே என்ற கேள்விக்கு ஓரளவிற்கு ஹதீஸ்களில் பதில்கள் கிடைக்கவே செய்கின்றன.
    தஜ்ஜால் கீழ்த்திசையிலிருந்து மதீனாவைக் குறிக்கோளாகக் கொண்டு புறப்பட்டு வருவான். அப்போது மலக்குகள் அவனது முகத்தை ‘ஷாம்’ பகுதியை நோக்கித் திருப்புவார்கள். அங்கேதான் அவன் அழிவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    வழிகெடுக்கக்கூடிய தஜ்ஜால் என்னும் ஒற்றைக்கண்ணன், மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் காலத்தில் கீழ்த்திஸையில் தோன்றுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: அஹ்மத்
    நிராகரிப்பின் சிகரம் கீழ்த்திசையில் இருக்கிறது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) நூல்கள்: புகாரி, முஅத்தா
    நிச்சயமாக இப்லீஸுடைய அரியாசனம் கடலில் இருக்கிறது. எனவே அவன்தான் படையினரை (இப்புவியில் குழப்பன் உண்டு பண்ண) அனுப்புகிறான். அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி) நூல்: முஸ்லிம்
    அன்றைய அரபு மக்கள் தங்கள் வியாபாரத் தொடர்பாக தரை மார்க்கமாக சீனா, இந்தோனேஷியா, மலேசியா, மாலத்தீவு, இலங்கை, இந்தியா வரையிலும் சென்று வந்தனர். முன்பு கிருஸ்தவராக இருந்த தமீமுத்தாரி(ரழி) அவர்கள் இவ்வாறு 30 நபர்களுடன் புயலில் சிக்கி ஒரு தீபகற்பத்தில் கப்பலோடு ஒதுங்கினார். அப்பொழுது ‘ஜஸ்ஸாஸா’ என்ற ஒரு பிராணி அவர்களிடம் ‘நீங்கள் இந்த மடத்திலுள்ள மனிதனிடம் செல்லுங்கள்’ என்று கூறியது. அங்கு அவர்கள் ஒரு பருமனான மனிதனைக் கண்டார்கள். அவனைப்போன்று ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. இரண்டு கரண்டை கால்களுக்கும், முட்டுக் கால்களுக்கும் இரும்பினால் தலை சேர்த்து கட்டப்பட்டிருந்தான். பின்பு அவன் சில கேள்விகள் கேட்டான். இறுதியில் “நான்தான் தஜ்ஜாலாவேன் (இங்கிருந்து) வெளியேற விரைவில் அனுமதி வழங்கப்படலாம்” என்று கூறியதாக தமீமுத்தாரி(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள்
    இவ்விஷயத்தை முன்பே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன் அல்லவா? என்று மக்களிடம் கேட்டார்கள். மக்கள் ‘ஆம்’ என்றனர். அறிந்து கொள்க! நிச்சயம் அவன் ஷாம் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான். அல்லது யமன் நாட்டின் கடல் பகுதியில் இருக்கிறான் என மும்முறை கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர்: ஃபாத்திமா பிந்த் கைஸ்(ரழி) நூல்: முஸ்லிம்
    தஜ்ஜால் கடலில் உள்ள தீவுக்குள் தனி மடாலத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
    ஏமன் கடல் பகுதி. ஷாம் (சிரியா) கடல் பகுதி எல்லாம் மக்களால் அறியப்பட்ட பிரதேசங்கள். மேலும் இங்கு தீவுக்கூட்டங்கள் அதிகம் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட கிழக்குத் திசையின் கடல் பகுதிகளில் ஏராளமான தீவுகளும், தீபகற்பங்களும் உள்ளன. இந்தோனேஷியாவில் உள்ள மொத்த தீவுகள் 13667. இதில் மனிதர்கள் வசிக்காத அடர்ந்த காடுகள் உள்ள தீவுகள் மட்டும் 6000க்கும் மேல். அதைத் தொடர்ந்துள்ள நமது அந்தமான் தீவுக்கூட்டங்கள் மனிதர்கள் எவரும் வசிக்காத தீவுகள் 265. மாலத்தீவில் மொத்தம் 2000, மனித நடமாட்டம் உள்ள தீவுகள் 199 மட்டுமே. ஆக ஏராளமான தீவுகள் மனிதப் பார்வையில் படாமல் உள்ளன.
    தஜ்ஜால் வருகையின் முக்கிய நோக்கம், தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் கொள்ளச் செய்து நரகில் தள்ளுவது. தஜ்ஜாலின் மூலம் இறைவன் மூஃமின்களுக்கு ஏற்படுத்தும் சோதனை கடுமையாக இருக்கும். ஃபித்னாக்களுக்கும் சுனாமி பூகம்பம் போன்ற சோதனைகளும் இந்தோனேஷியா தீவுகளை சூழ்ந்துள்ளது. அல்லஹ்வின் சோதனைக்கு காரணம் பெயரளவுக்கு முஸ்லிம்களாகவும் செயல்களில் மாற்று மதத்தினராக மாறிவிட்டதுதான். நாம் நம்முடைய செயல்களை அல்லாஹ்விற்கு பொருத்தமான முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகெங்கும் தனது அத்தாட்சிகளை வெளிப்படுத்துகிறான். அறிவுள்ளவர் தெரிந்து கொள்ளவும் திருந்திக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பு.
    நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். அல்குர்ஆன் 41:53 
    அல்குர்ஆன் வசனங்களையும் நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான ஹதீஸையும் ஒப்பிட்டு இக்கட்டுரையை எழுதியுள்ளார். இதன் மிகத்துல்லியமான உண்மை நிலையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
       
விசித்திர குள்ளர்களைப் பற்றிய சமீபத்திய ஆய்வுகளை சில இனையதளங்களில் காணலாம்.

Our Facebook Page :- Islam In Tamil



பாவ மன்னிப்பு (தவ்பா)



மனிதன் மலக்குகள் போன்று தவறே செய்யாதவனாக வாழ முடியாது! ஆசாபாசங்களும், உலகியல் தேவைகளும் உணர்ச்சிகளும் நிறைந்த சமூகப் பிராணியான மனிதன் தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ பல்வேறு தவறுகளைச் செய்யலாம். ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களும், முதல் தாய் ஹவ்வா(அலை) அவர்களும் ஷைத்தானின் தூண்டுதலால் அல்லாஹ்வின் கட்டளையை மீறியமையை குர்ஆன் மூலம் நாம் அறிகின்றோம்.
இவ்வாறே, ஆதமுக்கு சுஜுது செய்ய வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளையை ஷைத்தான் மீறினான். இதில் ஆதம் நபி மறதியாக மீறினார்கள். ஷைத்தான் கர்வத்தால் மீறினான். ஆதம் நபி தவறை உணர்ந்து தவ்பா செய்தார்கள். ஷைத்தான் தன் தவறை நியாயப்படுத்தி வாதிட்டான். இந்திகழ்ச்சியிலிருந்து மனிதன் தவறு செய்யும் இயல்பு உள்ளவன். ஆனால், குற்றம் புரிந்தவர்கள் தமது தவறுகளுக்காகத் தவ்பா செய்யும் போது ஆன்மீக ஈடேற்றத்தைப் பெறுகின்றனர். இவ்வகையில் குற்றம் புரிந்தவன் குற்ற உணர்வுடன் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாது தன்னைப் பக்குவப்படுத்தி திருந்துவதற்கான வாய்ப்பைத் தவ்பா வழங்குகின்றது. இந்த தவ்பா குறித்தும் அதன் ஆன்மீக, லௌஹீக பயன்பாடு குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

தவ்பாவின் நிபந்தனைகள்:
தவ்பா நிறைவேறவும், அதன் பயன்களைப் பெறவும் சில அடிப்படையான நிபந்தனை கள் இருக்கின்றன. அவற்றை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

1- தவறை அல்லாஹ்வுக்காக விடுதல்:
தான் செய்த தவறை விட்டும் ஒதுங்கிய ஒருவனால் மட்டுமே தவ்பாச் செய்ய முடியும். குறித்த தவறைச் செய்துகொண்டே நான் தவ்பா செய்கின்றேன் எனக் கூற முடியாது. அதேவேளை, தவறை அல்லாஹ்வுக்காக விட வேண்டும் என்பதும் கவனத்திற்குரியதாகும்.

2- செய்த தவறுக்காக வருந்துதல்:
தான் செய்த தவறு குறித்து வருத்தம் ஏற்பட வேண்டும். அந்த வருத்தமும் அல்லாஹ்வுக்காக ஏற்பட வேண்டும். நான் என் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டேனே! இப்படி செய்திருக்கக் கூடாதே என்றெல்லாம் வருத்தம் ஏற்பட வேண்டும். இந்தத் தவறைச் செய்ததால் இவ்வளவு செலவாகிவிட்டதே! நேரம் வீணாகி விட்டதே என்றெல்லாம் எண்ணம் வந்தால் அது தவ்பாவிற்குரிய வருத்தமாக இருக்காது!

“தவ்பா என்பதே (செய்த தவறைக் குறித்து) கவலை கொள்வதே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (இப்னு மாஜா- இங்கு ஹதீஸ் இலக்கம் குறிப்பிடப்படவில்லை எனவே இது உன்மையாகவே இது ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெற்றதா இல்லையா அல்லது இது ஸஹீஹான ஹதீஸா என்பது பற்றியும் இங்கு குறிப்பிடப்படவில்லை எனவே நீங்களும் பரிசீலனை செய்து பார்க்கவும் கண்மூடித்தனமாக நம்ம வேண்டாம்).
 
3- இந்தத் தவறை இனிச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல்:
தான் செய்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிகொள்ள வேண்டும். ஏதேனும் பலவீனத்தால் அதே தவறை மீண்டும் செய்து விட்டால் அவர் தவ்பாவைப் புதுப்பித்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

4- மரணத்தறுவாய் வரை தாமதிக்காதிருத்தல்:
சிலர் கடைசி நேரத்தில் தவ்பா செய்து கொள்ளலாம் என எண்ணலாம். இது சாத்தியப்படுமா என்பது ஒரு பிரச்சினை; அடுத்து ஸகராத் ஹாலில் தவ்பா செய்தால் அது அங்கீகரிக்கப் படாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
“இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (4:18).
“தொண்டைக் குழியில் உயிர் ஊசலா டாதவரையில் அடியானிடமிருந்து தவ்பாவை அல்லாஹ் அங்கீகரிக்கின்றான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்” (திர்மிதி).
எனவே, அந்த நிலைக்கு முன்னரே ஒவ்வொருவரும் தவ்பா செய்து கொள்ளவேண்டும்.
(இங்கு ஹதீஸ் இலக்கம் குறிப்பிடப்படவில்லை எனவே இது உன்மையாகவே ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெற்றதா இல்லையா அல்லது இது ஸஹீஹான ஹதீஸா என்பது பற்றியும் இங்கு குறிப்பிடப்படவில்லை எனவே நீங்களும் பரிசீலனை செய்து பார்க்கவும் கண்மூடித்தனமாக நம்ம வேண்டாம்)

5- சூரியன் மேற்கில் உதிக்கும் முன்னர்:
உலக அழிவின் பெரிய அடையாளங் களில் சூரியன் மேற்கில் உதிப்பதும் ஒன்றா கும். இந்த அடையாளம் நிகழ்ந்த பின்னர் செய்யப்படும் தவ்பா பயனளிக்காது.
“யார் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னர் தவ்பா செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
 (முஸ்லிம்-4635,4636)

6- உரியவரிடம் மன்னிப்புக் கோரல்:
இவை பொதுவாக எல்லாவகை பாவங்களும் மன்னிக்கப்படுவதற்கான நிபந்தனைகளாகும். ஆனால், புரியப்பட்ட குற்றம் அல்லாஹ்வுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் இந்த நிபந்தனைகளே போதுமானதாகும். ஆனால், மற்ற மனிதர்களுக்குப் புரிந்த குற்றத்தை குறித்த பாதிக்கப்பட்ட நபரின் மன்னிப்பின் பின்பே அல்லாஹ் மன்னிப்பான். இந்த வகையில் மனி தன் மனிதனுக்குச் செய்த குற்றமாக இருந்தால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அடுத்தவருக்கு அநீதியிழைத்திருந்தால் அதற்குப் பரிகாரம் காணவேண்டும். பொருட்களை அபகரித்திருந்தால் அதனை உரியவரிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும். இது சாத்தியம் இல்லையெனில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோரி, புரிந்த குற்றத்திற்குப் பரிகாரம் காணும் விதத்தில் நல்லறங்களை அதிகரிக்க வேண்டும்.
ஆன்மீகப் பயன்கள்:
தவ்பாவின் மூலம் பல்வேறு பட்ட ஆன்மீகப் பயன்களை நாம் பெறுகின்றோம். அவற்றையும் அறிந்து கொள்ள முயல்வோம்.
1- பாவமீட்சி:
குற்றம் புரிந்தவன் பாவ மன்னிப்புப் பெற்று மீட்சி பெறுகின்றான். அவன் குற்றவுணர்விலிருந்து விடுபடுகின்றான். இது மிகப்பெரும் ஆன்மீக ஆதாயமாகும்.
2- அல்லாஹ்வின் நேசம்:
” … பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்” (2:222).

அல்லாஹ்வின் நேசம் என்பது சாதாரணமானதல்ல. அல்லாஹ்வின் நேசம் மலக்குகளினதும் நல்லடியார்களினதும் நேசத்தைப் பெற்றுத் தருகின்றது.

“அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப் ரீலை அழைத்து நான் இன்ன நபரை நேசிக்கின்றேன். நீரும் அவரை நேசிப்பீராக என்பான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவரை நேசிப்பார். பின்னர் ஜிப்ரீல்(அலை) வானவர்களை அழைத்து அல்லாஹ் இந்நபரை நேசிக்கின்றான். எனவே, நீங்களும் அவனை நேசியுங்கள் என்பார். வானவர்களும் அவரை நேசிப்பார்கள். பின்னர் பூமியில் அவருக்கு (பிற மக்களின்) அங்கீகாரம் கிடைக்கும்” (புகாரி-3209, 6040, 7485)

எனவே, அல்லாஹ்வின் நேசத்தைப் பெறவும் தூயமனதுடன் தவ்பா செய்ய வேண்டும்.

அடுத்து இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட “தவ்வாபீன்” என்ற பதம் அடிக்கடி தவ்பா செய்வோர் என்பதைக் குறிக்கும். எனவே, அதிகமதிகம் தவ்பா, இஸ்திஃபார் புரிதல் ஏற்றம் மிக்கதாகும்.
அடுத்து இந்த வசனத்தில் கவனிக்கத் தக்க மற்றுமொரு அம்சமும் உள்ளது. அல்லாஹ் தவ்பா செய்பவர்களையும் பரிசுத்தவான் களையும் நேசிப்பதாக இவ்வசனம் கூறுகின்றது. இந்த இடத்தில் பரிசுத்தவான்கள் எனக்கூறப்படுவது குற்றங்களை விட்டும் பரிசுத்தமானவர்களைக் குறிக்கும் என்பது அறிஞர்களின் அபிப்பிராயமாகும். அவ்வாறெனில் அல்லாஹ்வின் நேசத்திற்கு தவ்பா செய்பவர்கள் முற்படுத்தப்பட் டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.


3- அல்லாஹ்வின் புகழ்ச்சி:
தவ்பா செய்பவர்களை அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் புகழ்ந்து கூறுகின் றான்.

“மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்கு பவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டு விலக்குபவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் – இத்தகைய (உண்மை) முஃமீன்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (9:112).
மேற்படி வசனத்தில் முஃமீன்களின் பண்புகளில் முதல் தரமானதான இப் பண்பு குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கத் தக்க தாகும்.
4- மலக்குகளின் பிரார்த்தனை:
தவ்பா செய்பவர்களுக்காக மலக்குகள் அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் அர்ஷை சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும், அல்லாஹ்வைச் சூழ இருப்பவர்களும் பிரார்த்திக்கின்றனர்.
“அர்ஷை சுமந்துகொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண்டும் இருக்கிறார்கள். அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர். “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப் பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையி லிருந்தும் காத்தருள்வாயாக!” (40:7).
“எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.”(40:8)

மேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களுக்காக பின்வரும் விடயங்களை வேண்டி மலக்குகள் பிரார்த்திப்பதாகக் கூறப்படுகின்றது.
(1) அல்லாஹ்வின் வழிமுறையைப் பின்பற்றி வாழும் தவ்பாதாரிகளுக்கு பாவமன்னிப்பை நல்குவாயாக!
(2) நரகத்தை விட்டும் அவர்களைக் காப்பாற்றுவாயாக!
(3) அவர்களையும், அவர்களது பெற்றோர்கள், மனைவிகள், சந்ததிகளில் நல்லவர்களையும் சுவனத்தில் நுழையச் செய்வாயாக!
(4) பாவங்களையும் தீங்குகளையும் விட்டும் அவர்களை நீ பாதுகாப்பாயாக!
மலக்குகளின் மேற்படி துஆ மூலமாக தவ்பாவின் மகத்துவத்தையும் உணர்ந்துகொள்ளலாம். தவ்பாவின் மூலம் தவ்பாச் செய்பவர் மட்டுமன்றி அவரின் பெற்றோர், சந்ததிகள், மனைவியர்களில் நல்லோர்களும் இந்தப் பாக்கியத்தைப் பெறுகின்றனர்.

5- நன்மைகளாக மாறும் தீமைகள்:
“ஆனால், (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்” (25:70).

அர்ரஹ்மானின் அடியார்கள் பற்றிப் பேசும் போது அவர்கள் இணை வைக்க மாட்டார்கள். கொலை, விபச்சாரம் புரியமாட்டார் கள் என்றெல்லாம் கூறிய பின்னரே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. இத்தகைய பாவங்கள் செய்தவர்கள் கூட தூய முறையில் தவ்பா செய்து அதன் பிறகு நல்லறங்களில் ஈடுபட்டால் அவர்களின் பாவங்களே நன்மைகளாக மாற்றப்படுகின்றன. இது மாபெரும் அருளாகும். அல்லாஹ்வின் அளவற்ற அன்பையும், அருளையும் வெளிப்படுத்தும் இத்தன்மை குறித்து சுவாரஸ்யமான ஒரு நிகழ்ச்சியை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“மறுமையில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அவரின் சின்னச் சின்னப் பாவங்களை அவருக்கு எடுத்துக் காட்டுங்கள். பெரிய குற்றங்களை உயர்த்திவிடுங்கள் என்று கூறப்படும். அவரிடம் “நீ இன்னின்ன நாளில் இப்படி இப்படியெல்லாம் செய்தாய்” என்று சின்னச் சின்ன குற்றங்கள் எடுத்துக்காட்டப்படும். அவன் அதை மறுக்கமுடியாது. அவற்றை ஒப்புக் கொள்வான். அதே வேளை தனது பெரும் குற்றங்கள் எடுத்துக் காட்டப்படுமோ என்று அஞ்சியவனாக இருப்பான். சிறிய பாவங்கள் காட்டப்பட்ட பின் “உனது ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு நன்மை பதியப்படும்” என்று கூறப்படும். உடனே அவன் “எனது இரட்சகனே! நான் இன்னும் பல பாவங்கள் செய்துள்ளேன். அவற்றை நான் காணவில்லையே” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தனது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்” என அபூதர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்-314).

6- அமல்கள் அங்கீகரிக்கப்படல்:
“அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட்கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என் னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
“சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான – நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம். இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மை யான வாக்குறுதியாகும்” (46:15-16)
மேற்படி வசனம் தவ்பா செய்பவர்களின் அமல்கள் அங்கீகரிக்கப்படும் என்றும், அவர்கள் புரிந்த குற்றங்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் சுவனவாசிகளைச் சேர்ந்தவர்களென்றும் கூறப் படுகின்றது.

7- சுவனம் செல்லல்:
அடியான் அடையும் அனைத்து அருள் களிலும் மேலானது சுவனமே! தவ்பாதாரிகள் அதனை அடைவார்கள் எனக் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ் விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக்கொண்டே இருக்கும். (தன்) நபியையும், அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான். (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்” (66:8).
மேற்படி வசனத்தில் தவ்பா செய்பவர் களது பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் அவர்களுக்கு “ஒளி” வழங்கப்படும் என்றும் அவர்கள் சுவனத்தில் நுழைவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது!

8- சுவனம் அருகில் கொண்டுவரப்படல்:
தவ்பாதாரிகள் சுவனம் செல்வதுடன் மிகுந்த கண்ணியத்தையும் இது விடயத்தில் பெறுவர். இது குறித்து இமாம் குஷைரி (ரஹ்) விளக்கம் கூறும் போது “மனிதர்கள் மூன்று வகையினர்.
(1) சுவனத்தை நோக்கி நடந்தவர்களாக செல்பவர்கள். தமது இரட்சகனை அஞ்சி நடந்தோர் கூட்டம் கூட்டமாக சுவனத்தை நோக்கி கொண்டு வரப்படுவார்கள்.
“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின் பால் கொண்டு வரப்படுவார்கள்.
(39:73)
(2) கண்ணியமாக ஒன்றுசேர்க்கப்படுவோர்
“அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;” (19:85)
(3) விசாரனை செய்யப்படும் இடத்திற்கே இவர்களை நோக்கி சுவனம் கொண்டுவரப்படும்.
“(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர் களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.”
“இது தான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).” (50:31-32)
இவர்களுக்கு சிறப்பளிக்கும் விதத்தில் இப்படிக் கூறப்படுகின்றது. இவர்கள் மிக உயர்ந்தவர்கள் என்று தனது “லதாயிபுல் இஷாராத்” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். இது தவ்பா தாரிகளின் சிறப்பைத் தெளிவுபடுத்துகின்றது.
லௌஹீக பயன்கள்
தவ்பா செய்வதனால் பல் வேறுபட்ட உலகியல் நலன்களும் கிடைக்கப்பெறுகின்றன என குர்ஆன் குறிப்பிடுகின்றது!

1- அழகிய வாழ்க்கை:
“நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்;. ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன் ” (11:03)
இந்த வசனம் தவ்பா கேட்பவர்களுக்கு இவ்வுலகில் நல்வாழ்வு வழங்கப்படும் என்றும் மறுமையில் நற்கூலி நல்கப்படும் என்றும் கூறுகின்றது.
“மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்”
“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர் ந்து மழையை அனுப்புவான்”
“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள் களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்;
இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்” (71:10, 11, 12)
மேற்படி வசனங்கள் தவ்பாவின் மூலம் மழை பொழியும் என்றும், உற்பத்தி அதிகரிக்கும் என்றும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்றும் உணர்த்தப்படுகின்றது.

2- பலம் அதிகரித்தல்:
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்;. இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் – இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (11:52)

இந்த வசனம் தௌபாவின் மூலம் தொடரான மழையைப் பெறலாம் என்றும் அதன் மூலம் எமது சக்தி சகல விதங்களிலும் அதிகரிக்கப்படும் என்பதையும் அறியலாம்.

உலகியல், மறுமை வெற்றி:
தவ்பாவின் மூலம் ஒரு மனிதன் ஈருலக வெற்றியையும் பெறலாம்.
“மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்” (24:31).

“ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் 
சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்” (28:67).

மேற்படி வசனங்கள் வெற்றியைப் பெற் றுத்தரும் என அறிவுறுத்துகின்றன. இவ்வாறான எண்ணற்ற பலன்களை தவ்பா மூலம் நாம் பெறலாம். எனவே, உரிய முறையில் தவ்பா செய்து உயரிய பயனை அடைய முயற்சிப் போமாக!



ஸகாத்தின் முக்கியத்துவம்

ஸகாத் :-

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

அடிப்படைக் கடமை:

‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது.
(1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல்.
(2) தொழுகையை நிலைநாட்டுதல்.
(3) ஸகாத்தைக் கொடுத்தல்.
(4) ஹஜ் செய்தல்.
(5) ரமழானில் நோன்பு நோற்றல். என்பனவே அவை யாகும் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்’ (புகாரி).

இந்தக் கருத்தில் வரக்கூடிய ஏராள மான அல்குர்ஆன் வசனங்களும்; ஹதீஸ்களும் ஸகாத் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்துகின்றன.

ஸகாத் தூய்மைப்படுத்தும்:

ஸகாத் என்றால், தூய்மை, வளர்த்தல் என்ற அர்த்தங்களைத் தரும்.

    ‘இன்னும் அவ்விருவருக்கும் பரிசுத்தத்திலும், (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்கக்கூடிய ஒரு மகனை, அவ்விருவருடைய இறைவன் கொலை யுண்டவனுக்குப் பதிலாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்’ (18:81).

    இங்கே ‘சகாதன்’ என்ற சொல் பரிசுத்தமான என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    ‘அவர்களின் செல்வங்களிலிருந்து, ஸகாத்தை நீர் எடுத்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி பரிசுத்தப் படுத்துவீராக’ (9:103)

என்ற வசனமும் ஸகாத் தூய்மையை வழங்கும் என்று கூறுகின்றது.

ஸகாத் வழங்கும் தூய்மை

‘ஸகாத்’ அதைக் கொடுப்போரிடம் பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது. அவற்றைச் சுருக்கமாக நோக்குவோம்.

1- பொருள்வெறி நீங்கல்
மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடராக ஸகாத் வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும்.

2- கஞ்சத்தனம் நீங்கல்
தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

    ‘அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும் படி தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம் ‘ (4:37).

    ‘நான் கஞ்சத்தனத்தை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன், என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள்’ (புகாரி).

இந்த வகையில் உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்தை நீக்கும் மருந்தாக ஸகாத் அமைந்துள்ளது.

3- பொறாமை நீங்குதல்
‘தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்’ என்ற உணர்வே பொறாமையாகும். ஸகாத் கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் எடுபட்டு விடுகின்றது. ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஸகாத் மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஸகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

4- கர்வம் அற்றுப்போதல்
சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஸகாத் நடைமுறை செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும்.

5- சமூக உணர்வு அதிகரித்தல்:
செல்வந்தர்களில் அதிகமானோர் சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஸகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் விடயத்தில் கரிசனை காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் விடயத் தில் அக்கறை செலுத்தும் போது, இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஸகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை விளை விக்கின்றது.

ஸகாத்தின் பயன்கள்:

ஸகாத் வழங்குவதால் பல்வேறு பட்ட
பயன்களை அடையலாம் எனக் குர்ஆன் குறிப் பிடுகின்றது. ஸக்காத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்காக அதன் பயன்கள் குறித்து நோக்குவோம்.

1- ஸகாத் வளரும்
ஸக்காத் வழங்குபவரின் பொருளாதாரத் தில் அபிவிருத்தி ஏற்படும் என்பதைச்

    ‘அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான். (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை’ (2:276)

என்ற வசனம் உணர்த்துகின்றது.

2- மறுமைக்கான சேமிப்பு
இங்கு வழங்கப்படும் ஸக்காத் மறுமைக்கான சேமிப்பு என்பதை,

    ‘இன்னும், தொழுகையை முறையாகக் கடைபிடித்தும் ஸகாத்தைக் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில், உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் உற்று நோக்கி யவனாகவே இருக்கிறான்’ (2:110).

3- அச்சமற்ற வாழ்வு:

    ‘யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களையும் செய்து, தொழுகையையும் நிலையாகக் கடைபிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருகின்றார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ (2:277).

ஸக்காத் மூலம் இம்மை, மறுமை அச்சமும் துக்கமும் அற்ற வாழ்வைப் பெறலாம்.

4- தண்டனையிலிருந்து பாதுகாப்பு:
தர்மம் தலைகாக்கும் என்பர். ஸகாத் வழங்குவது தண்டனைகளில் இருந்து நம்மைக் காக்கும் செயல்பாடாகும்.

    ‘என்னுடைய வேதனையைக் கொண்டு நான் நாடியவரைப் பிடிப்பேன். ஆனால், என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது. எனினும், அதனைப் பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஸகாத்து கொடுத்து வருவோருக் கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக் கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று (அல்லாஹ்) கூறினான்’ (7:156).

என்ற வசனம் இதனை உணர்த்து கின்றது.

    ‘செல்வந்தர்கள் தமது செல்வங்களுக் கான ஸகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள். கால்நடைகள் மட்டும் இல்லையென்றால் மழையே பொழியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
    அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா

5- அல்லாஹ்வின் அருள்:

    ‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள். தீயதை விட்டும் விலக்குகிறார் கள். தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். (ஏழை வரியாகிய) ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்’ (9:71).

அல்லாஹ்வின் அருளைப் பெற்றவரால் தான் சுவனம் செல்ல முடியும். அல்லாஹ்வின் அருளைப் பெற ஸகாத் ஒரு வழியாகும்.

6- அல்லாஹ்வின் உதவி:

    ‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்’ (5:12)

    ‘அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்குத் திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான்’ (22:40).

இந்த வசனங்கள், தொழுகையும் ஸகாத்தும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிட்டும் என்பதை உணர்த்துகின்றன.

7- இஸ்லாமிய சகோதரத்துவம்:
ஸக்காத் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையாகும்.



    ஆயினும், அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைபிடித்து, ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களா னால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே! நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்’ (9:11).

இவ்வசனம், ஸக்காத்தை வழங்க மறுப்பவர்கள் காபிர்கள் என்ற கருத்தைத் தருகின்றது.

    ‘அவர்கள்தாம் ஸகாத்தைக் கொடுக்காதவர்கள். மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!’
    (41:7).

என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றது.

8. வெற்றியாளர்கள்:

    ‘இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றியாளர்கள்’ (2:5).

இந்த வசனம் ஸகாத் வழங்குவது நேர்வழி என்பதையும், அதை நிறைவேற்றுவோர்தான் வெற்றியாளர்கள் என்ற கருத்தையும் தருகின்றது.

எப்போது கொடுக்க வேண்டும்?
‘நிஸாப்’ எனப்படும் குறிப்பிட்ட அளவையுடைய பணமோ பொருளோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்தால் அதற்கு ஸகாத் கொடுக்க வேண்டும்.

ரமழானில்தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் ‘ஸதகா’ வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும் எனும் போது, இந்த ஜனவரிக்குக் கொடுத்தவர் அடுத்த ஜனவரிக்கு மறுமுறை கணக்குப்பார்க்க வேண்டும் என்று கூற முடியாது. ஏனெனில், நாள், மாத, வருட கணிப்பு அனைத்தும் ‘சந்திர’ கணக்கு அடிப்படையில் கணித்தே இஸ்லாமிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். சூரிய வருடத்திற்கும், சந்திர வருடத்திற்கும் இடையே நாட்கள் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. எனவே, சந்திர கணக்கு அடிப்படையில் வருடத்தைக் கணித்து கொடுக்க வேண்டும். இன்று பலருக்கு இது சாத்தியப்படாததாக இருப்பதனால், ரமழான் மாதத்தை வருடத்தைத் தீர்மானிப்பதற்கான அளவீடாகக் கொள்வது அவரவர் கணக்கு வைத்துக்கொள்ள வசதியாக அமையலாம். எனினும் ரமழானில் தான் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து தவறானதாகும்.

கூட்டு நடைமுறையின் அவசியம்:
ஸகாத்தைத் அவரவர் தனித்தனியாக வழங்காது கூட்டாக சேகரித்து வழங்குவது அவசியமாகும்.

    ‘(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..’ (9:103).

என்ற வசனம் ஸகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து எடுங்கள் என்று கூறப்படுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,

    ‘அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்கள்’
    அறிவிப்பவர்: முஆத் (ரலி).,
    நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழி ஸகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

ஸகாத் பெற தகுதியான எட்டு கூட்டம் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது ஸகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.

    ‘(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,..’ (9:60).

என்று கூறுகின்றது. இதுவும் ஸக்காத்தைச் சேகரிக்க ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அடிப்படையில் ஸகாத்தை ஒரு குழு சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

1) அதிக மூலதனம்:
ஒரு ஊரில் ஸகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் ஐம்பது பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஸகாதும் ஒன்று திரட்டப்பட்டால் ஸகாத்தின் தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள பத்துப் பேருடைய பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

2) திட்டமிட்ட பகிர்ந்தளிப்பு:
கூட்டுமுறையில் ஸகாத் சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

3) அனைவரையும் சென்றடையும்:
கூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஸகாத் சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.

4) சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:
தேவையுடையோர் தனித்தனி நபர்களையணுகி ஸகாத் பெற முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய கௌரவம் பாதிக்கப்படுகின்றது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயகௌரவம் பாதுகாக்கப்படுகின்றது.

5) தற்பெருமைக்கு இடமிருக்காது
தனித்தனியாக ஸகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமை எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஸகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் ஸலாம் சொல்லவேண்டும்; பல்லிளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப்புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் எடுபட்டு செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

6) ஸகாத்தின் நோக்கம் நிறைவேறும்:
தனித்தனியாய் 100, 200 என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது அல்லது தொழில் செய்வதற் கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஸகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.

7) கணக்குப் பார்க்காத ஸகாத்:
நூற்றுக்கு இரண்டரை வீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஸகாத்தை நிறைவேற்றிவிட்டதாக எண்ணுகின்றனர். கூட்டு நடைமுறையூடாக இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.

8) பிச்சைக்கார சமூகத்தை உருவாக்கல்:
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஹதியா, பித்ரா என்ற பெயரில் படையெடுக்கும் பிச்சைக்காரக் கூட்டம் இதற்கு நிதர்சன சான்றாகும்.

9) சுய கௌரவமுள்ள ஏழைகள் பாதுகாக்கப்படல்:
தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையால் சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள ஏழை கள் பாதிக்கப்படுகின்றனர். அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும்; தாழ்ந்து செல்லும் துர்ப்பாக்கியம் நிகழ்கின்றது. கூட்டு முறையில் வழங்கும் போது இவர்களும் அப் பங்கைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

10) குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:
கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஸகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் நாடு பூராகச் சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று கொள்ளை லாபம் பெற, இப்பழக்கமற்ற நல்லோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

11) சொந்தப் பகுதிக்கு ஸகாத் செல்லாமை:
ஒரு ஊரிலுள்ள ஸகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஸகாத் பெறுகின்றான். இது ஸகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும்.

12) பரஸ்பரம் புரிந்துணர்வு:
கூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர் கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஸகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு கழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு மஸ்ஜித் நிர்வாகமும் தூய எண்ணத்துடன் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

Facebook :- Islam In Tamil "like our page"

ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்

       ஒரு நோன்பாளியின் சந்தேகங்கள்

நோன்பு :-

பிரதானமான தொன்றாகும். மனித ஆன்ம பரிசுத்தத்திற்கு வழி வகுக்கும் இவ்வணக்கத்தை மேற்கொள்ளும் ஒருவரின் உள்ளத்தில் எழக்கூடிய ஐயங்கள் எவை என யூகித்து அவற்றைத் தெளிவுபடுத்துமுகமாக இவ்வாக்கம் எழுதப்படுகின்றது.

சந்தேகம்:-
அனைத்து இபாதத்துக்களும் “நிய்யத்” அவசியமானது. நோன்பிற்கும் “நிய்யத்” அவசியமானதே. நோன்பின் நிய்யத் எனக் கூறப்படும் வாசகங்கள் ஆதாரபூர்வமானவைதாமா?

தெளிவு:-
“நிய்யத்” என்றால் “எண்ணங்கொள்ளல்” என்பதே அர்த்தமாகும். “நிய்யத்தை” வாயால் மொழிதல் கூடாது. எந்த இறை வணக்கத்தைச் செய்தாலும், அல்லாஹ்வுக்காக செய்கின்றேன் என்ற இஹ்லாஸான எண்ணத்துடன் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

நோன்பின் நிய்யத் என நபி(ஸல்) அவர்கள், குறிப்பிட்ட ஏதேனும் வாசகங்களைக் கற்றுத் தந்துள்ளார்களா? என வினவினால் அனைத்து ஹதீஸ்களும் “இல்லை” எனத் தலையசைக்கின்றன. “நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி பர்ழி ரமழான ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹித் தஆலா” என்ற நோன்பு நிய்யத் (?) வாசகங்கள் ஒரு ஹதீஸ் கிரந்தத்தில் கூட இடம்பெறவில்லை. (வேண்டுமானால் உலமாக்களிடம், இந்த வாசகங்கள் எந்த ஹதீஸ் கிரந்தத்தி;ல் இடம்பெற்றுள்ளது என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் நழுவுவதை நீங்களே காண்பீர்கள்) ஹதீஸ்களில் இல்லாத இந்த துஆவை மக்கள் கூறும் விதத்திலும், இந்த துஆவின் வாசகங்களிலும் அநேக தவறுகள் உள்ளன.
தராவீஹ் தொழுது முடிந்தவுடன் இமாம் இந்த துஆவை (?) மஃமூனுக்குச் சொல்லிக் கொடுப்பார். இமாம் இதை அரபியிலும் கூறி பொருளையும் தமிழில் கூற மஃமூம்களும் வழிமொழிவர். நிய்யத் இரு மொழிகளில் கூற வேண்டுமா? மக்களுக்கு அரபியில் சொல்ல (?) முடியுமென்றால் தமிழ் தேவையில்லை. அல்லாஹ்வுக்குத் தமிழ் தெரியாது; மக்களுக்கு அரபு புரியாது என்ற தவறான எண்ணம் அடி மனதில் இருப்பதனால் தானோ என்னவோ இவர்கள் இரு மொழிகளிலும் சொல்லிக் கொடுக்கின்றனர்.
சில இடங்களில் அரபியிலும், தமிழிலும் மும்மூன்று விடுத்தங்கள் சொல்லிக் கொடுப்பர். தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றோம் என்று சமாளிக்க முடியாத அளவுக்கு சின்னஞ் சிறுசுகளின் உள்ளங்களில் கூட இந்த துஆ ஆழப் பதிந்துள்ளது. தொழுகைக்கும் அரபு, தமிழ் என்று ஆறுவிடுத்தம் இவர்கள் “நிய்யத்”துச் சொல்லுவார்களோ?
ஆதாரமில்லாத நிய்யத்தை அர்த்தமற்ற விதத்தில் சொல்லிக் கொடுக்கின்றனர். சொல்லப்படும் வாசகங்களாவது தவறில்லாமல் இருக்கக்கூடாதா? “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன். அல்லாஹ்வுக்காக!” எனச் சொல்லப்படுகின்றது.
றமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் ஒருவன் சென்ற வருடத்து நோன்பையோ, வருகின்ற வருட நோன்பையோ நோற்கப் போவதில்லை. எனவே, “இந்த வருடத்தின் றமழான் மாதத்தின்” என்ற வார்த்தை அர்த்தமற்றதாகின்றது. “பர்ழான நோன்பை” என்ற அடுத்த வாசம்கூட றமழான் மாதத்தில் சுன்னத்தான நோன்பு இல்லை என்பதால் தேவையற்ற ஒன்றாகின்றது.

அடுத்து “நாளை பிடிக்க” நிய்யத்துச் செய்கிறேன் என்று சொல்லப்படுகின்றது. நாளை எதையேனும் செய்வேன் எனக் கூறுவதாயின் “இன்ஷா அல்லாஹ்” என்ற வாசகத்தை இணைத்தே கூற வேண்டும் என்ற சின்ன விடயம் கூட “துஆ”க் கண்டு பிடிப்பாளருக்கோ, அதை அணுவும் பிசகாது நடைமுறைப் படுத்தும் ஆலிம்களுக்கோ தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.
மேலும் ஒரு விபரீதம் நிகழ்வதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா முஸ்லிம்களும் ஸஹரில் சாப்பிட்டு விட்டு “நாளை நோன்பு பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன்” (அதாவது இன்று நான் நோன்பு பிடிக்கவில்லை) என்று கூறிவிடுகின்றனர். இது எவ்வளவு விபரீதமான வார்த்தை? இதை உலமாக்களும் கண்டு கொள்வதில்லை; மக்களும் சிந்திப்பதில்லை. மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதை அப்படியே செய்வதை உலமாக்களும், உலமாக்கள் எதைச் செய்தாலும் அது பற்றி சிந்தனை செய்யாது பின்பற்றுவதைப் பொது மக்களும் வழமையாகக் கொண்டுள்ளனர். சாதாரண தமிழ் அறிவுள்ளவன் கூட இந்த “துஆ” தவறானது என்பதை அறியமுடியுமல்லவா?

இறுதியாக “அல்லாஹ்வுக்காக” என்று சொல்லப்படுகின்றது. நோன்பின் நிய்யத் என்று சொல்லப்படும் வார்த்தைகளிலே இது ஒன்று மாத்திரம் தான் அர்த்தமுள்ளதாக உள்ளது. எனவே, “நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்” என்ற எண்ணத்துடன் மாத்திரம் நோற்போமாக!

சந்தேகம்:-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாமா?

தெளிவு :-
குளிப்புக் கடமையான நிலையில் விழிக்கும் ஒருவர் அதே நிலையில் நோன்பு நோற்கலாம். தொழுகைக்காக மாத்திரம் அவர் குளித்துக் கொண்டால் போதுமானது. இது பற்றி அன்னை ஆயிஷா(ث), உம்மு ஸல்மா(ث) ஆகியோர் கூறும் போது, “நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையிலேயே விழித்து அதே நிலையிலேயே நோன்பும் நோற்பார்கள்” என அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: தாரமீ-1725, புஹாரி-1925, முஸ்லிம்-1109, அபூதாவூத்-2388, திர்மிதி-779, இப்னுமாஜா- 1704, முஅத்தா-644,645)
சந்தேகம் நோன்பாளி ஒருவர் பகலில் உறங்கிக் கொண்டிருக்கும் போது “இஹ்திலாம்” ஏற்பட்டு (கனவில் விந்து வெளிப்பட்டு) விட்டால் அவரின் நோன்பு முறிந்து விடுமா?
தெளிவு :-
உறக்க நிலையில் ஒருவர் முழுக்காளியாவதால் நோன்பு முறிந்து விடாது. அவர் தொடர்ந்து அந்நோன்பை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், “கனவின் மூலம் முழுக்காளியானவர் நோன்பை விட்டுவிட வேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத்:பாகம்-1:பக்:554)

சந்தேகம் :-  “ஸஹர்” உடைய முடிவு நேரம் எது?

தெளிவு :-
ஸஹர் செய்யுமாறும், அதில் அதிகம் பரக்கத் உள்ளதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள பல ஹதீஸ்கள் உள்ளன. (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா ஹதீஸ் எண் -1692). இந்த ஸஹர் உணவை முடிந்தவரை தாமதப்படுத்துவதையே இஸ்லாம் விரும்புகின்றது. சுப்ஹுடைய நேரம் வந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தால் கூட உண்பதை நிறுத்த வேண்டியதில்லை. சுப்ஹுடைய நேரம் வந்துவிட்டது என்று உறுதியானால் தான் உண்பதை நிறுத்த வேண்டும். இதையே “குமரி இருட்டு நீங்கி விடியற்காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரை புசியுங்கள், பருகுங்கள்…” (2:187) என்ற வசனம் உணர்த்துகின்றது.
றமழான் காலத்தில் மக்களை எழுப்புவதற்காகவும், சுப்ஹுடைய தொழுகைக்காகவும் இரு அதான் கூறும் வழிமுறை நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அந்த இரு அதான்களுக்குமிடையில் சுமார் 50 ஆயத்துக்கள் ஓதும் இடைவெளி இருந்ததாக ஸஹாபாக்கள் கூறுகின்றனர். (புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா 1694)
சுப்ஹுடைய தொழுகைக்காக கூறப்படும் இரண்டாவது அதான் வரையிலும் உண்ணல், குடித்தல், எதுவும் தடுக்கப்படடதல்ல; சுப்ஹுடைய அதான் கூறுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னரே ஸஹருடைய நேரம் முடிந்து விட்டது என்ற கருத்து தவறானதாகும். ஏனெனில் “பிலால் இரவில் (உங்களை விழிப்படையச் செய்வதற்காக) அதான் கூறுவார். நீங்கள், உம்மி மக்தூம் (சுப்ஹுடைய) அதான் கூறும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்” என நபி() அவர்கள் ஏவியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆராதம்: இப்னு குஸைமா 1932)

சந்தேகம் :-
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ண ஆரம்பிக்கும் போதே சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் அவர் தொடர்ந்து உண்ணலாமா? அல்லது உண்ணாமலே பட்டினி நோன்பு இருக்க வேண்டுமா,

தெளிவு :-
தாமதித்து எழுந்த ஒருவர் உண்ணும் போது சுப்ஹுடைய அதான் கூறப்பட்டால் உண்பதை உடனே நிறுத்தி விட வேண்டியதில்லை. இதை அறியாத மக்கள் பலர் சுப்ஹுடைய அதானுக்குப் 15 நிமிடங்கள் இருக்கின்ற போது எழுந்தால் கூட பட்டினி நோன்பிலிருந்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வதுடன், தனது நோன்புக்கும், யூத நஸாராக்களின் நோன்புக்கும் இடையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் “ஸஹர்” எனும் சுன்னத்தையும் விட்டு விடும் பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதோ! இந் நபிமொழியைக் கவனியுங்கள்.
“தனது கையில் உணவுத் தட்டு இருக்கையில், உங்களில் எவரும் “அதான்” கூறுவதை செவியுற்றால் தனது தேவைக்கேற்ற அளவு உண்ணாமல் பாத்திரத்தை வைத்து (உண்பதை நிறுத்தி) விட வேண்டாம்.” (அபூ ஹுறைரா(ரழி) ஆதாரம் – அபூதாவூத்)

சந்தேகம் :-
நோன்பாளியொருவர் மறந்த நிலையில் எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் நோன்பு முறிந்து விடுமா?

தெளிவு :-
பதினொரு மாதங்கள் உண்டு பழக்கப்பட்டிருப்பதனால் சில வேளைகளில் நோன்பாளிகள் எதேச்சையாக எதையேனும் வாயில் போட்டு விடுவதுண்டு. இவ்வாறு மறதியாக உண்பதால் நோன்பு முறியவும் மாட்டாது; அதன் பலன் குறைந்து விடவும் மாட்டாது. அவர் தொடர்ந்து நோன்பிலேயே இருக்க வேண்டும்.
“யாரேனும் ஒரு நோன்பாளி மறதியாக எதையேனும் உண்டு விட்டால் அல்லது பருகிவிட்டால் அவர் தனது நோன்பை (நிறுத்திவிடாமல்) பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்ள். (அறிவிப்பவர்: அபூ ஹுறைரா(ரழி) – ஆதாரம்: புஹாரி, தாரமீ, முஸ்லிம்)

சந்தேகம் :-
நோன்பாளி பகல் வேளைகளில் பல் துலக்குவதால் நோன்பின் பலன் குறைந்து விடுமா?

தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைக்குப் பின் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து ஷாபி மத்ஹபு உடையோருக்கிடையே நிலவி வருகின்றது. நோன்பாளியின் வாயின் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிடச் சிறந்ததாகும் என்ற கருத்துடைய ஹதீஸ்களையே அவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இந்த ஹதீஸ் வாயில் வாடை வீச வேண்டும் என்ற கருத்தைத் தரவில்லை. இது இயற்கையாகப் பசியின் போது எழுகின்ற மணத்தையே குறிக்கும் என்று மாற்றுக் கருத்துடைய சிலர் விளக்கமளிப்பர்.
தர்க்க ரீதியாக நோக்கும் போது நாற்றம் வீசும் வாயே கஸ்தூரி போல் மணக்கும் எனின் நாற்றமற்ற நல் மணம் கொண்ட வாய் அல்லாஹ்விடத்தில் அதிக நறுமணமுள்ளதாக இருக்கும். எனவே, நோன்பு காலத்தில் மற்றக் காலத்தை விட அதிகமாகப் பல் துலக்க வேண்டும் என்றும் கூட இதே ஹதீஸை வைத்து முடிவு செய்ய வேண்டும். தர்க்க ரீதியாக இத் தீர்மானத்திற்குப் பின்வரும் ஹதீஸ் பலமுள்ள சான்றாகத் திகழ்கின்றது.
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கின்ற போது என்னால் கணிப்பிட முடியாது என்கின்ற அளவுக்கு அதிகமாக பல்துலக்க நான் கண்டேன்” என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) கூறினார்கள். (புஹாரி:1933, அபூ தாவூத், திர்மிதி:721)
இந்த ஹதீஸைப் பதிவு செய்து விட்டு இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் “இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள், முற்பகலிலோ, பிற்பகலிலோ பல் துலக்குவதில் தவறிருப்பதாகக் கருதவில்லை” எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
எனவே, நோன்பாளி அதிகளவில் பல் துலக்க வேண்டும். அதுவே, தூய்;மைக்கும், சுகாதாரத்திற்கும், தொழும் போது அணியில் இருப்போர்க்கும், மலக்குகளுக்கும் தொல்லை கொடுக்காத வழிமுறையாகும்.

சந்தேகம் :-
நோன்பாளி பகல் வேளையில் நீராடலாமா? உஷ்ணத்தைத் தவிர்ப்பதற்காக தண்ணீரை தன் மேனியில் ஊற்றிக்கொள்ளலாமா?

தெளிவு :-
மக்களில் சிலர் நோன்பென்றால் தன்னைத் தானே வருத்திக் கொள்வதென்று கருதுவதால் கஷ்டத்தை நீக்கும் எதையும் செய்யலாகாது என நினைக்கின்றனர். இதனால் தான் நோன்பாளி பகலில் நீராடக் கூடாது என்றும், வெயிலைத் தணிக்க தண்ணீரை ஊற்றிக் கொள்வது நோன்பின் “பாயிதாவை” குறைத்து விடும் என்றும் நம்புகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தாகத்தை அல்லது சூட்டைத் தனிப்பதற்காக தங்கள் தலையில் நீரை ஊற்றிக் கொள்வதை நான் பார்த்தேன்” என அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஅத்தா, அபூ தாவூத்)
குளிக்கும் போது உடல் உரோமத்தால் நீர் உட்செல்வதால் நோன்பு முறியாது. அவ்வாறே மணச் சவக்காரம் உபயோகித்தல், வாசனை பூசல், நுகர்தல், கண்ணுக்கு சுருமா இடல் என்பவற்றாலும் நோன்புக்கு எத்ததைய பாதிப்பும் இல்லை என்பதைக் கவனத்தில கொள்க.

சந்தேகம் :-

நோன்பாளி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன் மனைவியை முத்தமிட்டுவிட்டார். இப்போது இவரது நோன்பின் நிலை என்ன? ஏதேனும்
பரிகாரம் செய்ய வேண்டுமா?

தெளிவு :-
நோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
“நபி(ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது (தனது மனைவியை) முத்தமிடுவார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா(ث) – ஆதாரம்: தாரமி-1722, புகாரி கிதாபுல் ஸியாம்24ம் பாடம், முஸ்லிம் கிதாபுல் ஸியாம் 12ம் பாடம், இப்னுமாஜா-1683, அபூ தாவூத் கிதாபுல் ஸவ்ம் – 34ம் பாடம், திர்மிதி – 723)
சில அறிவிப்புக்களில். “நானும் நோன்பாளியாக இருக்கும் நிலையிலேயே நோன்பாளியான அவர் என்னை முத்தமிட்டார்” என்று காண்ப்படுகிறது. (அபூ தாவூத், கிதாபுல் ஸவ்ம் 24ம் பாடம்)
இது நபி(ஸல்) அவர்களுக்கு மாத்திரம் உரிய சட்டமல்ல. என்பதற்கும் அநேக சான்றுகள் உள்ளன. அதில் ஒன்றை மாத்திரம் வேறு சில தேவை கருதி இங்கே குறிப்பிடுகின்றோம்.

“ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் போது தமது மனைவியை முத்தமிட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நான் பெரியதொரு தவறைச் செய்து விட்டேன். நோன்புடன் (என் மனைவியை) முத்தமிட்டுவிட்டேன் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ நோன்பு நோற்றிருக்கும் போது வாய் கொப்பளிப்பது பற்றி என்ன எண்ணுகிறாய்? என வினவினார்கள். உமர்(ரழி) அவர்கள், அதில் தவறில்லையே எனப் பதிலளித்தார்கள். உடலுறவு, நீர் அருந்துதல் போன்றது என்றால் முத்தமிடுவது வாய்கொப்பளிப்பது போன்றது தான் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்கள் சூசகமாக உணர்த்தினார்கள்” (ஆதாரம்: தாரமீ-1724, அபூதாவூத்- 2385, இப்னு குஸைமா-1999)
எனவே, நோன்பாளியான கணவன்-மனைவி முத்தமிட்டுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரலாம். உணர்ச்சி வசப்பட்டு உடலுறவில் ஈடுபட்டுவிடுவோமோ என்ற அச்சம் இருப்பின் அதிலிருந்து விலகிக் கொள்ளல் கடமையாகும். நபியவர்களின் உவமானத்தைக் கூர்ந்து நோக்கும் போத இன்னுமொரு உண்மையையும் அறியலாம். “நோன்பாளி ஒருவர் வாய் கொப்பளிக்கும் போது தொண்டை வரை நீர் சென்று விடும் அளவுக்கு எல்லை மீறிச் செல்லலாகாது” என்பது நபிமொழி. இதனோடு ஒப்பிட்டு உவமையை நோக்கும் போது முத்தமிடுவதில் எல்லை மீறிச் சென்றிடலாகாது என்பதையும் யூகிக்கலாம்.